செங்கடலில் மூழ்கியது சரக்குக் கப்பல்.
யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த சரக்குக் கப்பலொன்று முதல்முறையாக கடலுக்குள் மூழ்கியது.
செங்கடல் வழியாகச் சென்ற பெலிஸ் நாட்டுக் கொடியேற்றிய ‘ரூபிமா் ’ சரக்குக் கப்பல் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் காரணமாக இந்த மாதம் சேதமடைந்தது. இதன் விளைவாக அந்தக் கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறி, தற்போது செங்கடல் பகுதியில் சுமாா் 29 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய்ப் படலம் பரவியிருந்தது.
ரூபிமா் கப்பலில் உரம் வைக்கப்பட்டுள்ள கலனும் சேதமடைந்துள்ளதால் அந்தப் பகுதியில் உரம் கடலில் கலந்து பரவும் அபாயமும் நீடித்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், ரூபிமா் கப்பல் முழுமையாக கடலுக்குள் முழ்கிவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூதிக்களின் தாக்குதலுக்குள்ளான ஒரு சரக்குக் கப்பல் கடலுக்குள் மூழ்கியுள்ளது இதுவே முதல்முறையாகும். பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட ரூபிமா் கப்பலை லெபானைச் சோ்ந்த நிறுவனமொன்று இயக்கி வந்தது.
இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கியதிலிருந்து, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹூதி கிளா்ச்சிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.