எம் ஜி ஆர். வியந்த அழகன் யார் தெரியுமா? வள்ளல் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் மிகவும் வசீகரமான தோற்றம் கொண்ட கதாநாயகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரது வள்ளல் குணமும் நாடறிந்ததுதான். ஆனால், எம்.ஜி.ஆரே பார்த்து வியந்த அழகன் ஒருவர் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த அழகான மனிதர் பெரும் கொடையாளர். அவரது வள்ளல்த்ன்மையைப் பார்த்தும் எம் ஜி ஆர் வியந்திருக்கிறார் தெரியுமா?
அப்படி எம்.ஜி.ஆரை வியப்பூட்டியவர் தமிழ் சினிமா உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான ஏழிசை வேந்தர் எம்.கே. தியாகராஜ பாகவதர்தான். அண்மையில், பாகவதர் பற்றிய ஆவணப் படம் ஒன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. நல்லி குப்புசாமி, கவிஞர் முத்துலிங்கம், திரைப்பட இயக்குனர் ராசி. அழகப்பன், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசும்போதுதான் கவிஞர் முத்துலிங்கம் பாகவதர் குறித்த எம் ஜி ஆரின் வியப்பு பற்றிக் குறிப்பிட்டார்.
மயிலாடுதுறைக்காரரான டாக்டர் கார்முகிலோன் என்கிற ராதாகிருஷ்ணன் எடுத்திருக்கும் பாகவதர் பற்றிய ஆவணப்படம் “காவிய நாயகன் பாகவதர்” என்பதாகும். இவர் சுமார் ஆறு மாத காலம் தீவிரமாக ஆய்வுகள் செய்து, ஏராளமான புத்தகங்களைப் படித்தும், பாகவதரது குடும்பத்தினர்களை சந்தித்து பேசியும் பல விஷயங்களையும் சேகரித்து, ஏற்கனவே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி இருக்கிறார். இப்போது அவருடைய வாழ்க்கையை ஆவணப் படமாக எடுத்திருக்கிறார்.
“இந்த ஆவணப் படத்தின் சிறப்பு அம்சம், இதனை எழுதி, இயக்கி இருக்கும் கார்முகிலோன், திரையில் தோன்றி, பாகவதர் பற்றிய ஏராளமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் இல்லாமல் அவரது வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை கலைஞர்களைக் கொண்டு நடிக்கச் செய்து, படமாக்கி இருக்கிறார். திரையில் தியாகராஜ பாகவதராக, கார்முகிலோனே தோன்றி சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார் நல்லி குப்புசாமி.
இப்படி ஓர் ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? என்று கேட்டபோது கார்முகிலோன் கூறிய பதில்: “தியாகராஜ பாகவதர் ஓர் உன்னதமான மனிதர். கொடையுள்ளம் கொண்டவர். அவர் அளித்த நன்கொடைகள், நற்பணிகளை இன்றைய நிலவரத்தில் பதிப்பிட்டால், பல நூறு கோடிகள் பெறும்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான். எங்கள் குடும்பத்தில் அனைவருமே பாகவதரின் பரம ரசிகர்கள். அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அதில், பாகவதர் பாடிய பாடல்களின் எல்.பி ரெக்கார்டுகள் ஓடிக்கொண்டே இருக்கும். நாங்கள் அவரது கந்தர்வக் குரலில் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள்.
எனவே, எனக்கு சிறு வயது முதலே பாகவதர் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. இவை அனைத்துக்கும் மேலாக, நான் இன்று ஒரு தீவிர சிவ பக்தனாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம், நான் சிறுவயதில் கேட்ட பாகவதரின் சிவபக்திப் பாடல்கள்தான்!
ஆனால், பரபரப்புக்காக அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாக சமீப காலமாக ஊடகங்களில் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினருக்கு, திரையில் பல அற்புதமான பாடல்களைப் பாடி, நடித்த மனிதநேயம் மிக்க மனிதரைப் பற்றி ஏதும் தெரியவில்லை. எதிர்காலத் தலைமுறையினர், இன்று ஊடகங்களால் பரப்பபடும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை உண்மை என்று நம்பிவிடக் கூடிய அபாயம் உள்ளது.
எனவே, பாகவதர் பற்றிய உண்மைகளை உள்ளது உள்ளபடி தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஆவணப்படுத்துவதை எனது கடமை என்று கருதினேன். அதன் பலன்தான் நான் எழுதி “ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்ற புத்தகம். அடுத்த கட்டமாக இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறேன்.
தியாகராஜ பாகவதர் அந்த காலத்தில் இவ்வளவு பிரபலமாக இருந்தார் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை தனது ஏழிசை மன்னர் எம் கே தியாகராஜ பாகவதர் என்ற புத்தகத்தில் கார்முகிலோன் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த சுவாரசியமான சம்பவம் பின்வருமாறு:
பாகவதரது ரசிகர்களுக்கும், ரசிகைகளுக்கும் அவரப் பார்ப்பது தேவலோகத்து இந்திரனேயே நேரில் பார்ப்பது போல என்று கருதினார்கள். ஒரு முறை பாகவதர் எர்ணாகுளத்தில் ஒரு கச்சேரியை முடித்துவிட்டு, கொச்சி எக்ஸ்பிரசில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும், அவரது முகத்தைக் காண ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கால தாமதம் ஆகியது.
இதன் உச்சகட்டமாக ஈரோடு ஸ்டேஷனில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஸ்டேஷன் ஏரியாவில் திரண்டிருந்த ஆயிரக்கனக்கான மக்கள், ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து, ரயில் மேற்கொண்டு நகர முடியாதபடி செய்துவிட்டார்கள். ஸ்டேஷன் அதிகாரிகளிடம் உத்தரவுகள், போலிஸ் மிரட்டல் எதுவும் அங்கே எடுபடவில்லை. கடைசியில் ரயில்வே அதிகாரிகளும், போலிஸ் அதிகாரிகளும் பாகவதர் பயணித்த ரயில் பெட்டிக்குச் சென்று ரசிகர்களை சமாளித்து, ரயில் நகர நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள்.
பாகவதர் ரயிலை விட்டு இறங்கி வெளியில் வந்து ரசிகர்களைப் பார்த்து சிரித்தபடியே கும்பிட்டதும், ஒரே ஆரவாரம். பாகவதர் தன் பெட்டிக்குள் சென்றார். ஆனால், மக்கள் நகரவில்லை. இன்னொரு தரம் பார்க்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள். மீண்டும் ரயிலை விட்டு இறங்கி, பாகவதர் கையசைத்து விட்டு உள்ளே சென்றார். ஆனாலும் ரயில் புறப்பட முடியவில்லை. காரணம், மீண்டும் ஒரு முறை பாகவதரைப் பார்க்க மக்கள் விரும்பினார்கள்.
மறுபடியும் ரயிலை விட்டு இறங்கிய பாகவதர், “இந்த ரயில் வண்டியில் எத்தனையோ ஜனங்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அவசரம் இருக்குமல்லவா. என்னால் அவர்களுக்கு இடையூறு ஏற்படலாமா? என் மேல் நீங்கள் கொண்டிருக்கும் அன்பு உண்மையென்றால், ரயில் செல்ல ஒத்துழைக்க வேண்டும். தயவுசெய்து, தண்டவாளத்தை விட்டு நகருங்கள்” என்று நாலாபுறமும் பார்த்து, கும்பிட்ட பிறகுதான், மக்கள் வெள்ளம் வழிவிட்டது. வண்டியும் புறப்பட்டது. அன்று, கொச்சி எக்ஸ்பிரஸ் அன்று ஐந்து மணி நேரம் லேட் !
தகவல் விக்னேஸ்வரன் கம்பளை இலங்கை