வங்கதேச தலைநகர் டாக்காவில் 43 பேர் உடல் கருகி பலி, பலர் படுகாயம்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு சுமார் 9.50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அது மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. மேல் தளங்களிலும் உணவகங்கள், துணிக் கடைகள் இருந்தன. இதனால் தீ இன்னும் எளிதாகப் பரவியது.
. வணிக வளாகத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 75 பேரை உயிருடன் மீட்டனர். இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 33 பேர் இறந்தனர். 10 பேர் அருகிலுள்ள ஷேக் ஹசினா தேசிய தீக்காய சிகிச்சை மையத்தில் உயிரிழந்தனர். 22 பேர் தீவிர தீக்காயங்களுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து டாக்கா மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.