தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 21,875 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. முன்னதாக கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி வரை நடந்தன.
இதையடுத்து, திட்டமிட்டபடி பிளஸ் 2 எழுத்து தேர்வு இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடக்கும். இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,58,201 பேர் மாணவர்கள். 4,13,998 பேர் மாணவியர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும் எழுதுகின்றனர். இந்நிலையில்,தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும், பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் யாரும் தேர்வுப் பணியில் ஈடுபடக்கூடாது என்று அடிப்படையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் அனைத்து தனியார் பள்ளி தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.