முருங்கைப்பூ புலாவ் செய்முறை
முருங்கைப் பூவில் புரதச்சத்து, விட்டமின் பி1, பி2, பி3, சி போன்ற சத்துக்களும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் நிறைந்து இருக்கிறது. முருங்கைப்பூவை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல் தவிர்க்கப்படுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்த நோய் கட்டுக்குள் வருகிறது. எலும்புகளும், நரம்புகளும் வலுப்பெறுகிறது. நரம்புத்தளர்ச்சி நோயை முற்றிலும் நீக்க உதவுகிறது. ஆஸ்துமா, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவுகிறது. கல்லீரலை இருக்கக்கூடிய கழிவுகளை நீக்க உதவுகிறது. கன்பார்வை திறனை அதிகரிக்கிறது. ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. ஆண்களுக்கு வீரிய தன்மையை கொடுக்கும் அருமருந்தாக திகழ்கிறது
தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – ஒரு கப் முருங்கைப்பூ – ஒரு கப் வெங்காயம் – 1 பூண்டு – 5 பல் பட்டை – 1 பிரியாணி இலை – 1 பச்சை மிளகாய் – 3 கிராம்பு – 2 ஏலக்காய் – 2 சீரகம் – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எலுமிச்சை பழம் – பாதி எண்ணெய் – 2 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் தண்ணீர் – 2 கப் உப்பு – தேவையான அளவு
செய்முறை முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். முருங்கை பூவை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி அது சூடான பிறகு அதில் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை போட வேண்டும். பிறகு பூண்டையும், பச்சை மிளகாயும் அதில் சேர்க்க வேண்டும். பூண்டு லேசாக சிவந்த பிறகு அதில் சீரகத்தையும் சேர்க்க வேண்டும். சீரகம் பொரிந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் முருங்கை பூவை சேர்த்து வதக்க வேண்டும்.
முருங்கைப்பூவும் வதங்கிய பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து அரிசி உடையாத அளவிற்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு குக்கரை மூடி விட வேண்டும். குக்கரில் இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு விசில் போன பிறகு குக்கரின் மூடியை திறக்க வேண்டும். பிறகு அதில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு கொத்தமல்லி தலையையும் தூவி ஒரு கிளறு கிளறி பரிமாறி விட வேண்டும். மிகவும் சுவையான சத்து மிகுந்த முருங்கைப்பூ புலாவ் தயாராகிவிட்டது.