நெல்லிக்காய் இட்லி பொடி செய்முறை

பழங்களையும், காய்கறிகளையும் நாம் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது பலரும் அறிந்த உண்மையே. விலை உயர்ந்த பழங்களை சாப்பிடுவதை விட மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஆப்பிளுக்கு இணையாக கருதப்படக் கூடிய ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கக்கூடிய நெல்லிக்காயை வைத்து எப்படி ஆரோக்கியமான முறையில் இட்லி பொடி செய்வது

தேவையான பொருட்கள் நெல்லிக்காய் துருவியது – ஒரு கப், உளுந்தம் பருப்பு – ஒரு கப் துவரம் பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 20 கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு பெருங்காயம் – ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் நெல்லிக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு கேரட் துருவுவது போல் பொடியாக துருவிக்கொள்ள வேண்டும். துருவிய இந்த நெல்லிக்காயை வெயிலில் ஒரு நாள் முழுவதும் நன்றாக உலர விட வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் துருவி வைத்திருக்கும் நெல்லிக்காய் துருவலை அதில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வரமிளகாயை போட்டு வறுத்து அதையும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வறுத்து அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உளுந்தம் பருப்பை அந்த கடாயில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதைப்போல் துவரம் பருப்பையும் கடாயில் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கடைசியாக தேவையான அளவு உப்பையும் பெருங்காயத் தூளையும் சேர்த்து ரெண்டு கிண்டு கிண்டி அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த உப்பும் பெருங்காயத்தூளும் அப்படியே கடாயில் இருக்கட்டும். அனைத்து பொருட்களும் நன்றாக ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து இட்லி பொடி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இட்லி பொடி தயாராகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.