நாவல் பழ ரசம் செய்முறை
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கிய உணவுகளில் நாவல் பழமும் ஒன்று தான். நாவல் பழத்தில் பலவிதமான உணவு வகைகளையும் சமைக்கலாம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்த சமையல் குறிப்பு பதிவில் நாவல் பழத்தை வைத்து அட்டகாசமான ஒரு ரசம் எப்படி வைப்பது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். ரசம் என்றாலே தெறித்து ஓடுபவர்கள் கூட நாவல் பழத்தில் ஒரு முறை இப்படி ரசம் வைத்து கொடுத்து பாருங்க திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள் நாவல் பழம் – 10 (கொட்டை நீக்கியது) ரசப்பொடி – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1 ஸ்பூன், வெல்ல துருவல் – 1 ஸ்பூன், தக்காளி – 1, பூண்டு – 4 பல், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கியது – 1 கைப்பிடி, துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், கடுகு – 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, நெய் -1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை ரசம் வைப்பதற்கு முதலில் நாவல் பழத்தில் இருக்கும் கொட்டைகளை தனியாக எடுத்து விட்டு பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இத்துடன் நல்ல பெரிய பழுத்த தக்காளி ஒன்றை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கைகளால் நன்றாக பிசைந்து கரைத்துக் கொள்ளுங்கள். அடுத்து துவரம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து லேசாக பொடி எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டை தோல் உரிக்காமல் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரசத்திற்கு புளிக்கரைசல் தேவையில்லை. இப்போது ரசத்தை தாளித்து விடலாம் வாங்க.
அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் கடுகு காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்த பிறகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் கரைத்து வைத்த தக்காளி நாவல் பழ கரைச்சலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். ரசம் ஒரு கொதி வர துவங்கியதும் துவரம் பருப்பு, ரசப்பொடி, உப்பு, தட்டிய பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி வரும் வரை விட வேண்டும். கடைசியாக ரசம் நுரைத்து இறக்கும் தருவாயில் வெல்லத் துருவல், பெருங்காயம் கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து தட்டு போட்டு மூடி அப்படியே அடுப்பை அணைத்து விடுங்கள்.