விண்வெளி செல்லும் 4 வீரர்கள்
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்கள்: பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி கவுரவித்தார்; 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் சக்திகள் என புகழாரம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சமீப காலமாக பல சாதனைகளை செய்து வருகிறது. சந்திரயான் 3 விண்கலம் சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி பெரும் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, விண்வெளி சாதனையில் அடுத்த மைல்கல்லாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்கள் 3 நாட்கள் சோதனை நடத்தி பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்பி வருவார்கள். இந்த திட்டத்திற்காக ரூ.9,023 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய விமானப்படை மற்றும் இஸ்ரோ இணைந்து 12 பேரை தேர்வு செய்து பல கட்ட சோதனைக்கு உட்படுத்தி அவர்களில் இருந்து 4 பேரை தேர்வு செய்தது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர்கள் 4 பேரும் ஆரம்பகட்ட பயிற்சிக்காக ரஷ்யா அனுப்பி வைக்கப்பட்டனர்.
ககன்யான் திட்டத்தின் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்று வரலாற்றில் இடம்பிடிக்க உள்ளனர்.
திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 4 பேரின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட்டு அறிமுகம் செய்துவைத்தார்.