10மணி நேரத்தில் கொத்தாக தூக்கிய போலீஸ்

வந்தவாசி அருகே நள்ளிரவு நேரத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கார், கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள, விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் இவர் மறைமலைநகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போலத் தனது பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் உத்திரமேரூரில் இருந்து விளாங்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்தபோது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து, அவரிடம் இருந்த செல்போன், ஸ்மார்ட் வாட்ச்,ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, தமிழரசன் கீழ்கொடுங்காலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த இளைஞர்களைத் தேடி வந்தனர்.

விசாரணையில், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முனிரத்தினம், பிரசன்னா, இசான் முகமது, மற்றும் விஜி ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் ஐந்து பேரும் தமிழரசனிடம் பட்டா கத்தியைக் காட்டி பணம் கொள்ளையடித்து நபர்கள் எனத் தெரிய வந்தது. இதில் மணிகண்டன், முனிரத்தினம் மற்றும் பிரசன்னா ஆகிய மூன்று நபர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.