மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது

பூந்தமல்லியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது. இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கியவர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.சென்னை மாநகராட்சி மேயராக இருப்பவர் பிரியா, இவர் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு தயாரிப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த நிலையில் வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்திற்கு சென்று விட்டு காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது முன்னாள் சென்ற கார் திடீரென மெதுவாக சென்றது. அப்போது வேகமாக வந்த மேயரின் கார் திடீரென பிரேக் போட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி மேயர் பிரியாவின் காரின் பின்பகுதியில் மோதி தள்ளியதில் முன்னாள் சென்ற காரின் மீது மோதி நின்றது. 

இதில் மேயர் பிரியாவின் காரின் முன் மற்றும் பின் பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மேயர் பிரியா அலறியபடி சத்தம் போட்டார். மேலும் விபத்தை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மேயர் பிரியாவை காரில் இருந்து மீட்டனர். வெளியே வந்த மேயர் நிம்மதி பெருமூச்சு விட்டார். 

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.