ராணுவத்தில் சேர விரும்பினேன்
ராஜ்யசபா எம்.பி.,யான ஜெயா பச்சன், தான் ராணுவத்தில் சேர விரும்பியதாகவும், ஆனால் அந்த காலக்கட்டத்தில் செவிலியர்களை தவிர மற்ற பெண்களுக்கு அனுமதி கிடையாது எனவும் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மனைவியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஜெயா பச்சன் (75) 2004ல் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யானார். அதிலிருந்து தொடர்ந்து 4வது முறையாக அப்பதவியில் நீடிக்கிறார். வரும் ஏப்ரலில் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், 5வது முறையாக அவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயா பச்சன் தனது மகள் ஸ்வேதா பச்சனுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர். அப்போது ஜெயா பச்சன் பேசியதாவது: முன்பெல்லாம், ஆண்களை பின்னால் அமர வைத்து பெண் வாகனம் ஓட்டினால் அபூர்வமாக பார்க்கப்படும். ஆனால் இப்பொழுது அதையெல்லாம் சாதாரணமாக பார்க்கின்றனர். அந்த வகையில் உண்மையில் முன்னேறிவிட்டோம். நான் ராணுவத்தில் சேர விரும்பினேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்த ஒரு காலகட்டம் அது. அந்த நேரத்தில், செவிலியரை தவிர மற்ற பெண்களை ராணுவத்தில் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
அப்போதைய காலக்கட்டத்தில் பல துறைகளில் இருந்த ஆணாதிக்க முறைகளால் பெண்களுக்கு ஏற்பட்ட தடைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். ராணுவத்தில் சேர விருப்பப்பட்டும் செல்ல முடியவில்லை என ஜெயா பச்சன் வேதனையுடன் தெரிவித்தார்.