பராமரிப்பில்லாத குளம் சீரமைக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் பாழடைந்து வரும் ஒக்கப்பிறந்தான் குளம் மற்றும் குளக்கரை பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்போது அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் ரூ.20 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மடம் தெரு அண்ணா நூற்றாண்டு பூங்கா ரூ.2.40 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சள் நீர் கால்வாயில் வெள்ள தடுப்புச்சுவர், ஒக்கப்பிறந்தான் குளக்கரையில் நடைபாதை, இருக்கைகள் அமைத்தல், மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அழகு படுத்தும் பணிக்காக ரூ.2.58 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன.
அதனடிப்படையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காஞ்சிபுரம் ஒக்கப்பிறந்தான் குளத்தை சுற்றி தடுப்புச்சுவர், உட்புறம் கம்பி தடுப்பு, நடைபாதை, பொதுமக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கை வசதி, கழிப்பறை, குளத்தை சுற்றி மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. குளக்கரை பூங்கா பாதுகாப்புக்காக காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் குளக்கரை பூங்கா ஆரம்பத்தில் ஒளிமயமாக காட்சியளித்தது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பாதுகாவலர் பணிக்கு யாரும் வராததால் குளக்கரையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமானது. குளக்கரையில் மது அருந்தத்தொடங்கிய குடிமகன்கள் கழிப்பறை கதவு மற்றும் சிமென்ட் தரையை உடைத்து போட்டனர். நடைபாதையில் குடித்துவிட்டு பாட்டிலை உடைத்துவிட்டு செல்கின்றனர். குளக்கரை பூங்காவில் இருந்த மின்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. மேலும் மாநகர அந்தஸ்து பெற்ற காஞ்சிபுரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் என பெரிதாக எதுவும் இல்லை. மடம் தெரு அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வருகின்றனர். இதுபோன்று ஒக்கப்பிறந்தான் குளம் மற்றும் குளக்கரை பூங்கா பராமரிக்கப்பட்டால் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையத்தெரு, புத்தேரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுவதுடன் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு இடமாகும் மாறும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் ஒக்கப்பிறந்தான் குளக்கரை பூங்காவை முழுமையாக சீரமைத்து பராமரிக்க பணியாளர்களை நியமிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.