தேமுதிகவை ‘வளைத்து’ போடும் அதிமுக
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும் இரு கட்சிகளிடையே இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பாஜக, அதிமுக கூட்டணிகளில் எந்த கட்சிகள் இணையும் என்பது உறுதியாகவில்லை. பாமக, தேமுதிக, தமாகா ஆகியவை பாஜக மற்றும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பாமகவைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 8 தொகுதிகள் தரக் கூடிய கட்சியின் கூட்டணிக்கு செல்ல தயாராக இருக்கிறது. இதனால் பாஜக தரப்பு 10 தொகுதிகள் வரை பாமகவுக்கு தர ஒப்புக் கொண்டிருக்கிறதாம். தேமுதிகவும் 6 அல்லது 7 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறதாம். ஆனால் பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஓகே சொல்லப்பட்டுள்ளதாம்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 அல்லது 8 தொகுதிகள் ஒதுக்க அக்கட்சி தயாராக இருக்கிறதாம். தற்போது தேமுதிகவுக்கும் 5 தொகுதிகளை அள்ளி கொடுக்க அண்ணா திமுக தயாராகிவிட்டதாம். தேமுதிக தரப்புடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடத்தி வருகிறதாம். முன்னதாக லோக்சபா தேர்தலில் 14 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் கொடுத்தால்தான் கூட்டணி என அதிரடியாக நிபந்தனை விதித்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிபந்தனைகளால் பாஜக, அதிமுக ஆடிப் போயின. இதனையடுத்தும் தாம் அப்படி எல்லாம் நிபந்தனை விதிக்கவே இல்லை என அந்தர் பல்டி அடித்தார் பிரேமலதா. தேமுகவின் வாக்கு சதவீதம் என்பது நோட்டா அளவுக்கு கூட கிடையாதுதான். ஆனால் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாபம் அக்கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த அடிப்படை களநிலவரத்தை புரிந்து கொள்ளாமலேயே பாஜக, அதிமுகவுடன் இன்னமும் “எதிர்க்கட்சி” என்ற நினைப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்