சிறுவர்கள் உள்பட 6 பேர் பகீர் வாக்குமூலம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாராயணம்பாளையம் கிராமத்தில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர்கள் கூறிய தகவல் நடுங்க வைத்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாராயணம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மாதா கோவில் தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாதா கோவில் தெருவில் உள்ள 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன
2 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசியது. இந்த பெட்ரோல் குண்டுகள் வீட்டின் சுவரில் பட்டு கீழே விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் வெடிகுண்டால் உயிர் சேதம், பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 20), சாரதி, கோபாலகிருஷ்ணன் (20), சந்தோஷ்குமார் (20) மற்றும் 2 சிறுவர்கள் என 6 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறிய காரணம் தான் அதிர்ச்சியாக அமைந்தது. இதுதொடர்பாக 6 பேர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:
‛‛சம்பவத்தன்று 3 பேர் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த பெரியநாயகம் உள்ளிட்டவர்கள் பைக்கை நிறுத்தி 3 பேரையும் மெதுவாக செல்லும்படி அறிவுரை கூறியதோடு, எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் அவர்கள் 3 பேரும் கோபமடைந்துள்ளனர். இதையடுத்து இரவில் பழிவாங்கும் நோக்கத்தில் அவர்கள் மேலும் 3 பேரை அழைத்து கொண்டு 2 பைக்கில் வந்து வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பொதுமக்கள் பிடிக்க முயன்ற நிலையில் அவர்கள் பைக்கில் எஸ்கேப் ஆகியுள்ளனர். பைக்கில் வேகமாக சென்றதை கண்டித்த கோபத்தில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது” என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது