காப்புரிமை பெற விண்ணப்பம் பதிவதில் தமிழகம் முதலிடம்
சென்னை: தமிழகத்தில், ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் அதிகம் துவக்கப்படுவதால், 2022 – 23ல், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், காப்புரிமை பதிவுக்கு விண்ணப்பம் செய்ததில், 7,686 பதிவுடன், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில், 2021ல், 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை, தற்போது, 7,600ஆக உயர்ந்துள்ளது.
அதற்கு ஏற்ப, இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதும் அதிகரித்து வருகிறது. 2022 – 23ல் நாடு முழுதும் காப்புரிமைக்கு, 82,811 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில், 7,686 பதிவுகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மஹாராஷ்டிரா, 5,626 பதிவுடன் இரண்டாவது இடத்திலும்; உபி., 5,564 பதிவுடன் மூன்று; கர்நாடகா, 5,408 பதிவுடன் நான்கு; பஞ்சாப், 3,405 பதிவுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில், 2021 – 22ல், 5,263 விண்ணப்பம் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து, இந்திய அறிவுசார் சொத்துரிமை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு விண்ணப்பம், பல கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, காப்புரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி கிடைக்க ஓராண்டுக்கு மேலாகலாம்.
எனவே, ஒருவர் தன் கண்டுபிடிப்பு, தயாரிப்புக்கு காப்புரிமை பெற விண்ணப்பிப்பதே, அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கருத வேண்டும்.
மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் காப்புரிமைக்கு அதிக விண்ணப்பங்கள் வருகின்றன.
அவை, பரிசீலிக்கப்பட்டு காப்புரிமை வழங்கப்படுகிறது. மருந்து, வேளாண், அழகு சாதன பொருட்கள் என, பல்வேறு துறை தயாரிப்புகளுக்கு விண்ணப்பங்கள் அதிகம் வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.