அமெரிக்கா நிறுவனம் படைத்த சாதனை
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று, நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் (Intuitive Machines) என்ற தனியார் நிறுவனம் நிலவின் தென்துருவத்தை ஆராய ஒடிசியஸ் (Odysseus) என்ற விண்கலத்தை உருவாக்கியது. பிளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரிலில் இருந்து ஏவப்பட்ட ஒடிசியஸ் விண்கலம் சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
நிலவின் தென்பகுதியில் நீர் மற்றும் அதிர்வெண் அலைகளின் இருப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏவப்பட்டுள்ள ஓடிசியஸிஸ் விண்கலத்தில் நாசாவின் 6 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப் கூன்ஸ் என்பவர் வடிவமைத்த 125 சிறிய சிற்பங்களும் விண்கலத்தில் வைத்து நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன் மூலம் முதன் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற பெருமையை இன்டியூடிவ் மெஷின்ஸ் பெற்றுள்ளது. இதனை பாராட்டியுள்ள நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு, தனியார் நிறுவனத்தின் ஒடிசியஸ் விண்கலம், பல்வேறு வகைகளில் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.