புதுச்சேரி சபாநாயகர் கேள்வி
புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கு ஆளுநர் தமிழிசை தடையாக உள்ளார்; புதுச்சேரி சபாநாயகர் செல்வம் குற்றச்சாட்டு
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் காலவரையின்றி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், புதுச்சேரியில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்ட ரூ.335.70 கோடிக்கான பூர்வாங்க திட்ட அறிக்கை கோப்பினை தயாரித்து துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபரில் சமர்பிக்கப்பட்டது.
ஆளுநர் தமிழிசை கையொப்பமிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, பல்வேறு விளக்கங்களை கேட்டு துறைக்கு திருப்பி அனுப்பினார். உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரினால் தலைமை செயலருக்குத்தான் கோப்பினை அனுப்பும். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பாமலேயே துணைநிலை ஆளுநர் விளக்கங்கள் கேட்கிறேன் என்ற பெயரில் கோப்பினை கால தாமதப்படுத்த வேண்டிய அவசியம் ஏன்? என கேள்வி எழுப்பிய சபாநாயகர், புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கு ஆளுநர் தடையாக உள்ளார் என குற்றம் சாட்டினார்.
100 சதவீத மானியம் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தும், கால தாமதப்படுத்தாமல் துணைநிலை ஆளுநர் இந்த கோப்பினை விரைந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மத்திய உள்துறையிடம் புகார் செய்வேன் என்றும் செல்வம் கூறினார்.