‘டில்லி சலோ’ அணிவகுப்பு: 22 வயது பஞ்சாப் இளைஞர் மரணம்

‘டில்லி சலோ’ அணிவகுப்பு போராட்டம்: விவசாயிகளை ஹரியானா காவல்துறை தடுக்க முயன்றபோது 22 வயது பஞ்சாப் இளைஞர் மரணம்; போராட்டத்தை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்த விவசாயிகள்

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உத்தரவாதத்தைக் கோரி ‘டில்லி சலோ’ அணிவகுப்பை மேற்கொண்டபோது அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகளையும், விவசாயிகளின் கூற்றுப்படி, ரப்பர் தோட்டாக்களையும் ஹரியானா காவல்துறையினர் பயன்படுத்தியபோது, 22 வயதான பஞ்சாப் விவசாயி, மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள கானௌரி எல்லை பகுதியில் புதன்கிழமை தலையில் காயம் காரணமாக இறந்தார்.

விவசாயிகளின் அணிவகுப்பைத் தடுக்க ஹரியானா காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த கானௌரி மற்றும் ஷம்பு எல்லை பகுதிகளில் மொத்தம் 26 பேர் காயமடைந்ததாக பஞ்சாப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராமத்தைச் சேர்ந்த சுப்கரன் சிங் என்ற இளைஞர், தலையில் காயம் ஏற்பட்டு இறந்த பிறகு, விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் முதல் பலி ஆனார். சுப்கரன் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் “இறந்ததாக” அறிவிக்கப்பட்டார்.

சுப்கரனின் தலையில் காயம் ஏற்பட்டது எதனால் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாட்டியாலா ரேஞ்ச் டி.ஐ.ஜி ஹர்சரண் சிங் புல்லர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “டாக்டர்களால் இறப்புக்கான சரியான விவரங்கள் வெளியிடப்படும், ​​எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், ரப்பர் புல்லட் அவரை (சுப்கரன்) தாக்கியது. டாக்டர்களை ஒருங்கிணைக்க டி.எஸ்.பி.,யை அனுப்பியுள்ளோம்” என்று கூறினார்.

இதுகுறித்து ராஜிந்திரா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஹர்னம் சிங் ரெக்கி கூறுகையில், “தலையின் பின்பகுதியில் காயத்துடன் சுப்கரன் கானௌரியில் இருந்து இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார்” என்று கூறினார். இது புல்லட் காயமாக இருக்கலாம், ஆனால் காயத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று டாக்டர் கூறினார். தோட்டா தாக்கிய பின் விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் கூறியதற்கு, டாக்டர் ரெக்கி, “இதை நிராகரிக்க முடியாது” என்று கூறினார்.

இளைஞரின் மரணம் காரணமாக விவசாயிகள் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வரை நிறுத்தி வைத்தனர். ஷம்பு எல்லையில் இருந்த கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பந்தேர், அவர்கள் வெள்ளிக்கிழமை நிலைமையை “ஆய்வு செய்வார்கள்” என்று கூறினார்.

மாலையில், கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கப்பட்ட BKU ஏக்தாவின் (சித்துபூர்) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா அமைதிக்காகவும், பேச்சுவார்த்தைக்கு திரும்பவும் அழைப்பு விடுத்தார்.

“நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குறைந்தபட்ச ஆதரவு கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்தல், முட்புதர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கு எதிரான FIRகள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. மீண்டும் விவசாயத் தலைவர்களை விவாதத்திற்கு அழைக்கிறேன். அமைதியை நிலைநாட்டுவது எங்களுக்கு முக்கியம்” என்று அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறினார்.

சுப்கரனின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்தார். “நான் சம்பவத்தின் வீடியோவைப் பார்த்தேன். நாங்கள் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வோம்,” என்று பகவந்த் மான் கூறினார்.

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் மற்றும் டி.ஜி.பி எஸ்.எஸ் கபூர் ஆகியோரை தொடர்பு கொண்டு கருத்துகளை பெற இந்தியன் எக்ஸ்பிரஸ் முயன்றது, ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.கானௌரியில் இளைஞரின் மரணம் குறித்த செய்தி வருவதற்கு முன்பு, காலை 11 மணிக்கு அணிவகுப்பு தொடங்குவதற்கு அழைப்பு விடுத்த விவசாயிகள் தலைவர்கள், மத்திய அமைச்சர்களுடன் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக ஷம்பு எல்லையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுப்கரன் இறந்த தகவல் அறிந்ததும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published.