கர்நாடகாவில் வெடித்த கன்னடத்தாய் வாழ்த்து
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரம் வெடித்திருப்பது போல கர்நாடகாவில் கன்னடத் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரம் சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டசபையில் முதலில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை ஏற்காததால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாம் உரையை முழுமையாக வாசிக்கவில்லை என ஆளுநர் ரவி தமது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சட்டசபையிலேயே சபாநாயகர் அப்பாவு விளக்கமும் தந்தார். தமிழ்நாடு சட்டசபைக்கு என ஒரு மரபு உள்ளது. ஆளுநர் உரையின் தொடக்கத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தும் நிறைவில்தான் தேசிய கீதமும் இசைக்கப்படும். ஆனால் ஆளுநர் ரவியோ இதனை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரே வெளிநடப்பும் செய்ய பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதேபோல கர்நாடகாவில் கன்னட வாழ்த்துத் தாய் பாடல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகா சட்டசபையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் அசோக், கன்னடத் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்பாக மாநில அரசின் உத்தரவில் தனியார் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தனியார் பள்ளிகளில் கன்னடத் தாய் வாழ்த்த் பாடுவது கட்டாயமில்லை என்கிறது அந்த உத்தரவு.அப்படியானால் கன்னட்த் தாய் வாழ்த்தை தனியார் பள்ளிகள் பாடக் கூடாதா? இதற்காக கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடகாவில் நடப்பது துக்ளக் தர்பார் அரசு என கடுமையாக கொந்தளித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.எக்கள் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்ப அமளி ஏற்பட்டது.