நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்அவர்களின் ஜனன தினமாகும்…..(09.01.2023)
இன்று பழம்பெரும் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்அவர்களின் ஜனன தினமாகும்…..(09.01.2023) பெயருக்கு கதாநாயகனின் முழு நீள சிரிப்பு படம் இப்படியெல்லாம் தமிழ் திரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இன்றும் மாறாத விதி.இதற்கு முன்னோடியான நடிகர் தான் மறைந்த கதாநாயக, நகைச்சுவை,குணச்சித்திர,வில்லன் என பன்முக ஆற்றல் கொண்ட நடிகர் T.R.ராமச்சந்திரன். இவர் 09.01.1917 அன்று தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் திருக்காம்புலியூரில் ரங்காராவ் ரங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்ப்பட உலகின் தலைசிறந்த ஒரு நகைச்சுவை . இவர் கதாநாயகனாக சுமார் 150 படங்களுக்கு மேலாகவும்,துணை நடிகராக,நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு படத்தயாரிப்பாளரும் ஆவார். கோமதியின் காதலன் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது தமிழில் 1938-இல் நந்தகுமார் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சபாபதி, வாயாடி, திவான் பகதூர், ஸ்ரீ வள்ளி, நாம் இருவர், அடுத்த வீட்டுப் பெண், வாழ்க்கை, மாப்பிள்ளை, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, வண்ணக்கிளி, கள்வனின் காதலி, பாக்தாத் திருடன், விடி வெள்ளி, அன்பே வா, சாது மிரண்டால்,இருவர் உள்ளம், தில்லானாமோகனாம்பாள், வாழையடி வாழை, மருமகள், படிக்காத மேதை, அறிவாளி, சிங்காரி, அன்பளிப்பு, என்ன முதலாளி சவுக்கியமா, அனுபவம் புதுமை, முயலுக்கு மூணு கால் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட காலம் அமெரிக்காவில் வசித்து வந்தார். பழம்பெரும் நடிகர் காளி என் ரத்தினத்துடன் இணைந்து சபாபதி படத்தில் இவர் தான் கதாநாயகன். 1941-இல் இப்படம் வெளி வந்து சபாபதி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.1941ல் T.R.ராமச்சந்திரன் ’சபாபதி ‘யில் கதாநாயகன்.ஒரு தமிழ் சிரிப்பு நடிகர் மிக முன்னணி நடிகைகள், அன்றைய கனவுக்கன்னிகளுக்கு கதாநாயகனாக நடித்தார் என்றால் அவர் T.R.ராமச்சந்திரன் மட்டும் தான்.பின்னாளில் அகில இந்திய நடிகையாக புகழ் பெற்ற வைஜயந்திமாலா அறிமுகமான முதல் படமான “வாழ்க்கை”யில் இவர் தான் முதல் நாயகன் .(1949ல் ஏ.வி.எம் மின் “வாழ்க்கை”) நடிகையர் திலகம் சாவித்திரி 1953ல் நாகேஸ்வரராவுடன் “தேவதாஸ்” ஜெமினியுடன் ”மனம் போல் மாங்கல்யம்”முடித்து 1955ல் ஜெமினியுடன் நடித்த”மிஸ்ஸியம்மா” வெளிவந்தது.அதே வருடம் சாவித்திரி கதாநாயகியாய் நடித்த படம் “கோமதியின் காதலன்”. இந்தப் படத்தில் அவருக்கு கதாநாயகன் சிரிப்பு நடிகர் T.R.ராமச்சந்திரன்.அதே 1955ல் பின்னால் அகில இந்திய நட்சத்திரமாகி, ராஜ்கபூருடன் கலக்கிய நாட்டிய பேரொளி பத்மினி நடித்த ’’கதாநாயகி’’படத்தின் கதாநாயகன் இவரே.1960ல் தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றான “ அடுத்த வீட்டுப் பெண்” படத்தில் அஞ்சலிதேவியின் கதாநாயகனும் இவரே“புனர்ஜென்மம்” (1961) படத்தில் ராமச்சந்திரன் டியூசன் வாத்தியாராக தங்கவேலு மகள் ராகினிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார்.”சாது மிரண்டால்” படத்தில் கதாநாயகன் T.R.ராமச்சந்திரன்.இந்தப் படத்தில் பாலமுரளியின் அருமையான பாடல்” அருள்வாயே,நீ அருள்வாயே, திருவாய் மலர்ந்து அருள்வாயே”என்ற பாடலை T.R.ராமச்சந்திரனுக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடினார்.சாது மிரண்டால் படத்தில் இவரின் நடிப்பு மிகப் பிரமாதம்.1990.11.30 அன்று டி.ஆர். ராமச்சந்திரன் ஐக்கிய அமெரிக்காவில் தனது 73வது அகவையில் காலமானார். ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.