நீங்களும் சாதனையாளரே..!

உங்களிடம் இந்த 7 குணங்கள் இருந்தால் நீங்களும் சாதனையாளரே..!

தன்னம்பிக்கை உடையவன் தரணியை ஆள்வான்’ என்பார்கள். ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாகத் தன்னம்பிக்கை இருக்கவேண்டும்.

தன்னம்பிக்கைதான் ஒருவரை சாதிக்க வைக்கும். என்னதான் நம்மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருந்தாலும் சில சமயங்களில் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளம்பிற்கே சென்றுவிடுகின்றோம்.

தரமான சில குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம்தான் சாதனையாளர். அதற்கு, தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.

உண்மையில், தன்னம்பிக்கை உடையவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

  • தன்னம்பிக்கையுடைய மனிதர்கள் தாங்கள் எடுக்கும் முடிவில் அடுத்தவர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள் பிறரின் ஆலோசனைகளை அவர்கள் கேட்டாலும், எது சரி, எது தவறு என்பதை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, தங்களுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படியே செயல்படுவார்கள்.

பொதுவாக இப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகளுமே இதயபூர்வமானதாகவும், நிம்மதியைத் தருவதாகவும் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

  • தன்னம்பிக்கை உடையவர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கமாட்டார்கள். எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும்கூட, அது தங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கக்கூடும் என்று எண்ணி துணிந்து செயல்படுவார்கள் .

ஒவ்வொரு புது அனுபவமும் ஒரு பாடம் என்பதை நன்கு அறிவார்கள். அவர்களின் சாதனைப் பட்டியல்களுக்கு வரையறையை வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள் .

  • தாங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும், அதனால் விளையும் விளைவுகளுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை நன்கு உணர்வார்கள். சில சமயங்களில், வாழ்க்கை என்னும் விளையாட்டின் முடிவுகள் கை மீறிப் போகும்போது, அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாக மாற்றிகொள்ள முடியும் என்பதைப் பற்றிதான் யோசிப்பார்களே தவிர அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள்.
  • தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் அதிகம் விரும்பும் நபர், அவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பொய்யான வேஷம் போட்டுக்கொண்டு, ‘நான் ரொம்ப நல்லவன்’ என்று பிறரிடம் காட்டிக்கொள்வதில் விருப்பம் கொள்ளாதவர்கள். யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம், தான் இப்படித்தான் என்று வெளிப்படையாக இருப்பார்கள். பிறரைப் போலத் தன்னிடத்திலும் குறைகள் உண்டு என்பதை உணர்வார்கள். அவர்களின் எண்ணங்கள் ஒத்துப்போகும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்களோடுதான் அதிகம் உறவாடுவார்கள் .
  • இவர்கள் காணும் கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து கனவுகள் நனவாகப் பாடுபடுவார்கள்

தன்னம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் போகும் பாதையில் சந்தேகம் வந்தால், உடனே பின்வாங்கிவிடமாட்டார்கள்.

அதற்கான காரணத்தை ஆராய்ந்து வெற்றி பெறுவதற்கான வழியைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள்.

  • விலை உயர்ந்த கார்களை வாங்குவதாலும், ஆபரணங்கள், ஆடைகளை அணிவதாலும் மட்டும்தான்தான் பிறரைக் கவர முடியும் என்பது தன்னம்பிக்கையற்றவரின் செயல் என்று கூறுவார்கள்.

பிறரைக் கவர்வதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் தற்காலிகமானதுதான்.

நம்மிடம் உள்ள குணங்களையும், நல்ல மனதையும் பார்த்துவரும் உறவுகள்தான் நிலைத்துநிற்கும் என்பார்கள் .

  • தோல்வியடையும் போதும், ஒவ்வொரு முயற்சியிலும் அவர்களை ஊக்குவிக்க மற்றவரின் ஆறுதல் அவசியம் என்று நினைப்பதில்லை. எதைக்காட்டிலும் சுயமரியாதை அவசியம் என்று எண்ணுவார்கள்.

பிறரிடம் கருத்து விவாதம் செய்வது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. எதிர்தரப்பினர் கூறும் கருத்துகளில் நியாயம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்.

தன் கருத்துகள் அனைத்துக்கும் ஆமோதிப்பதையும் விரும்பமாட்டார்கள் .

மேலே குறிப்பிட்டுள்ள 7 குணங்களோடு உங்கள் குணம் ஒத்துப்போனால் நிச்சயம் நீங்களும் ஒரு தன்னம்பிக்கையாளர் தான்.

NEWS
LION P VENKATESAN,M.A.,
PRESIDENT CHENGALPATTU DISTRICT
TAMILNADU JOURNALIST UNION

Leave a Reply

Your email address will not be published.