ஈழத்து தமிழறிஞர் மு.தி.சதாசிவ ஐயரின் நினைவு தினம் இன்று….!
“முகாந்திரம்” தி. சதாசிவ ஐயர்
தோற்றம்:1882.மறைவு: நவம்பர் 27.1950.
இவர் ஈழத்துத் தமிழறிஞரும், எழுத்தாளரும், புலவரும் ஆவார்.பல வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
பிறப்பிடம்:அளவெட்டி, யாழ்ப்பாணம்.
பெற்றோர்:தியாகராஜ ஐயர்,செல்லம்மாள்.
சதாசிவ ஐயர் யாழ்ப்பாணம் தெற்கு
அளவெட்டியில் பெருமாக்கடவை என்னும் ஊரில் 1882 ஆம் ஆண்டு தியாகராஜ ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றிப் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக பணியில் இருந்தார்.
சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
.காளிதாசரின் இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியம் என்ற பெயரில் தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார். தேவி தோத்திர மஞ்சரி, தேவி மாநச பூசை அந்தாதி ஆகிய நூல்களையும் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டார். இவை தவிர குழந்தைகளுக்காகப் பிள்ளைப் பாட்டு நூல் வெளிவரவும் ஐயர் உதவினார்.
ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினர் 1942 ஆம் ஆண்டில்வெளியிட்ட கலாநிதி என்ற
பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார். 1945 இல் சுவதர்மபோதம் என்ற மும்மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.யாழ்ப்பாணத்தில் பல தமிழ் பண்டிதர்களை உருவாக்கிய ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர் சதாசிவ ஐயர். சங்கம் நடாத்திய பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் சோதனைகளில் தேறியவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார்.தனது சொந்தச் செலவில் சுன்னாகம் கதிரமலை தேவஸ்தானம் எதிரில் பிராசீன பாடசாலை என்ற பெயரில் பாடசாலை ஒன்றை அமைத்தார். இப்பாடசாலையில் தமிழும் சம்க்ருதமும் தக்க அறிஞர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.புகழ் மிக்க தமிழறிஞர் வித்துவ சிரோமணி
சி. கணேசையர் இப்பாடசாலைக்கு பொறுப்பாக இருந்துள்ளார்.சதாசிவ ஐயர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளைக் கௌரவிக்குமுகமாக இலங்கை அரசு அவருக்கு “முகாந்திரம்” என்னும் கௌரவ பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.
எழுதிய நூல்கள்:
இருது சங்கார காவியம்.
ஐங்குறு நூறு – மூலமும் உரையும்.
தேவி தோத்திர மஞ்சரி
சின்னத்தம்பிப் புலவர், நல்லூர், 1716-1780 (அரும்பதவுரை)
தேவி மாநச பூசை அந்தாதி
ஆக்கம்: எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை