சிட்பண்ட் நிறுவன மோசடி…
திருச்சி:
வையம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் தேக்கமலை (31) மற்றும் பாம்பாட்டிபட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் தீனதயாளன் (31) ஆகியோர் வையம்பட்டி, துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சிட்பண்ட் (சீட்) கம்பெனி நடத்தி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து பாதிக்கபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் வையம்பட்டி காவல் நிலையம் மற்றும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் அளித்து பின்னர் அது குறித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர்.இந்நிலையில் சிட்பண்ட்டில் பணத்தை பறிகொடுத்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தலைமறைவான இருவரையும் கைது செய்து,பணத்தை மீட்டு தர கோரி இன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அவர்களிடம் தங்களது குறைகளை எடுத்துக் கூறினர்.அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் கீதாராணியிடம் பொதுமக்கள் தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி கூறிய போது வட்டாட்சியர் கீதாராணி பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் என்று பணத்தை இழந்து தவித்து வந்த பொது மக்களின் மனதை நோகடிக்கும்படி பேசினார்.அப்போது அதனை கேட்டு கொந்தளித்த பொதுமக்கள் குடும்ப அட்டையை வெளியே எடுங்கள் கொடுத்து விட்டு சென்று விடுவோம் என ஆக்ரோசப்பட்டனர்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வட்டாட்சியர் நிதி நிறுவன உரிமையாளர்களின் இருவரின் சொத்து கணக்கை மதிப்பீடு செய்து,அதை கைப்பற்றி அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்