கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை திமுக புறக்கணித்திருந்தது. இதற்கான காரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் விளக்கமளித்துள்ளார்.

தேநீர் விருந்தை புறக்கணித்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின்கீழ் விளக்கமளித்தார். ஸ்டாலின் பேசியதாவது: நீட் விலக்கு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் மாளிகையில் கடந்த 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. இந்த நேரத்தில், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துக்கொள்வது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சட்டசபை மாண்பினை மேலும் சிதைப்பதாகவும் அமையும். எனவே, அந்த விருந்தில் கலந்துக்கொள்ளவில்லை. இது குறித்து கவர்னருக்கு கடிதம் எழுதினேன்.

கவர்னருடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை, எனக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. மேடை பேச்சுகளில் இந்த அரசை பல முறை கவர்னர் பாராட்டி பேசியுள்ளார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். கவர்னருக்கு உண்டான மரியாதையை நாங்களும் தொடர்ந்து அளிப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுகளை விட, தமிழகத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே முக்கியமானது. சட்டசபை மாண்பையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதித்து நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.