ஐதராபாத் வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம்!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த குஜராத் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். அவர் தனது கடைசி ஓவரை காயம் காரணமாக வீசவில்லை. அவருக்கு வலது கையில் பெருவிரலுக்கும், அதற்கு அடுத்துள்ள விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் தசையில் கிழிவு ஏற்பட்டுள்ளது. காயம் குணமடைய குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்று தெரிகிறது. 

இதனால் வருகிற 15-ந் தேதி நடக்கும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும், 17-ந் தேதி நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் விளையாட முடியாது. பந்துவீச்சில் சிக்கனத்தை காட்டும் 22 வயதான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில், ‘வாஷிங்டன் சுந்தரின் காயத்தை அடுத்த 2-3 நாட்களில் கண்காணிக்க வேண்டும். இந்த காயம் குறிப்பிடத்தக்க பின்னடைவாக இருக்காது என்று நம்புகிறோம். காயம் குணமடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன்’ என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.