மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்!!
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு இன்று (ஏப்.,12) பட்டாபிஷேகம் நடக்கிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருகின்றனர். மதுரையை எட்டு மாதங்கள் சுவாமி ஆட்சி செய்வார். அதற்காக ஆவணியில் அவருக்கு பட்டாபிஷேகம் நடக்கும். அம்மன் நான்கு மாதங்கள் ஆட்சி செய்வார். அதற்காக இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது.
அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் கொண்ட ராயர் கிரீடம் அம்மனுக்கு சாற்றப்பட்டு, பட்டாபிஷேகம் செய்து ரத்தினங்கள் இழைத்த செங்கோல் வழங்கப்படும். அம்மனிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்ப்பிப்பார்.
நாளை அஷ்டதிக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெறும் திக்விஜயம் நடக்கிறது. ஏப்., 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் திருக்கல்யாணமும், ஏப்.,15 தேரோட்டமும் நடக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.