தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்..!!

71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒரு வாரமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று மாலை நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 87-69 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்வை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. 

ஏ.அரவிந்த் 25 புள்ளியும், அரவிந்த் குமார் 21 புள்ளியும், ஜீவானந்தம் 14 புள்ளியும் எடுத்து தமிழக அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த போட்டியில் தமிழகம் பட்டம் வெல்வது இது 11-வது முறையாகும். மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 96-79 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை தோற்கடித்து 3-வது இடத்தை பெற்றது.
பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் பலம் வாய்ந்த இந்தியன் ரெயில்வே அணி 131-82 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை எளிதில் வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தியது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 82-70 என்ற புள்ளி கணக்கில் கேரளாவை வென்றது. தமிழக வீராங்கனை பர்திபா பிரியா 19 புள்ளியும், ராஜேஸ்வரி 16 புள்ளியும் சேர்த்தனர்.
இரவில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சந்தர் முகி ஷர்மா, பொருளாளர் ரகோத்தமன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
முதலிடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.