பணியின்றி ஓய்வெடுக்கும் படகுகள் !!
பழவேற்காடு : கடலில் நீரோட்ட திசை மாற்றத்தால், மீன்வரத்து இன்றி மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். இதனால், மீன்பிடி படகுகள் கரைகளில் ஓய்வெடுத்து வருகின்றன. இதனால், அன்றாட செலவினங்களுக்கு கடன் வாங்கி செலவழித்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப் பகுதியில், 13 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வங்காள விரிகுடா கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.பழவேற்காடு பகுதியில், 2,200 பைபர் படகுகள் உள்ளன. தினமும் 10 – 15 ‘நாட்டிக்கல் மைல்’ தொலைவிற்கு கடலில் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில், மத்தி, கவலை, அயிலா, வஞ்சிரம், பாறை, சூறை, கிழங்கான், வவ்வால் என பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும்.
நள்ளிரவிலும், அதிகாலையிலும் கடலுக்கு செல்லும் மீனவர்கள், பிடித்துவரும் மீன்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருவாய்தான் அவர்களது வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்நிலையில், ஒரு வாரமாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்கள் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.வலைவீசி பல மணி நேரம் காத்திருந்தும், மீன்கள் ஏதும் சிக்காமல், காலி படகுகளுடன் கரை திரும்புகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.