இதுவரை இல்லாத அளவுக்கு 1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் சாதனை!!
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் ₹1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இதில், ஒன்றிய ஜிஎஸ்டி ₹25,830 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ₹32,378 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹74,470 கோடியாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில், இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலான ₹39,131 கோடியும் அடங்கும். இதுபோல், செஸ் வரி ₹9,417 கோடி வசூலாகியுள்ளது. இதில், இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் மூலம் ₹981 கோடி கிடைத்துள்ளது.
கடந்த மாத ஜிஎஸ்டி வசூல், முந்தைய ஆண்டு இதே மாதம் வசூலானதை விட 15 சதவீதம் அதிகம். மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, அதிகபட்சமாக கடந்த ஜனவரி மாதம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் வரி கட்டமைப்புகள் சரியான முறையில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதன் மூலம் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.