132 பேர் பலியான விபத்து 49 ஆயிரம் துண்டுகளாக உடைந்த சீன விமானம்!!

சீனாவில் நடுவானில் இருந்து பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து நொறுங்கிய விமானம், 49 ஆயிரத்து 117 சிறிய துண்டுகளாக சிதைந்துள்ளது. சீனாவில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம், கடந்த 21ம் தேதி 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டது. வுஜோ நகரில் உள்ள தெங்சியான் கவுண்டியில் உள்ள மோலாங் கிராமத்திற்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து மலைக்குன்றுகளின் மீது செங்குத்தாக விழுந்து வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக 20 மீட்டர் அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. மேலும், அருகில் இருந்த காடும் தீப்பற்றியது. விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகத்திற்கான விமான பாதுகாப்பு இயக்குனர் ஜூ டாவ் கூறுகையில், ”விபத்து நடந்து பத்து நாட்களுக்கு பிறகு, சம்பவ இடத்தில் இருந்து இன்ஜின், ஸ்டெபிலைசர், இடது பக்க இறக்கையின் முனை உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,’’ என்றார். இதேபோல், குவாங்சோ அரசு அதிகாரி சாங் சீவென் கூறுகையில், ‘‘விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்பு பணிக்காக 22 ஆயிரம் கனஅடி மீட்டர் மண் வெளியேற்றப்பட்டுள்ளது. விமானத்தின் 49,117 சிதைந்த துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன,” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.

Leave a Reply

Your email address will not be published.