கிழக்கு அண்டார்டிகாவில் ராட்சத பனி அடுக்கு சரிவு: ரோம் நகரத்தின் அளவு கொண்டது!!
கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான வெப்பநிலை காரணமாக அங்கு முதல்முறையாகப் ராட்சத அளவிலான பனிப்பாறை உருகிச் சரிந்துள்ளது. 1,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட, ‘காங்கர் பனி அடுக்கு’ என்னும் பனி அடுக்குகள் உருகிச் சரிந்தது. அதன் அளவு ரோம் நகரத்தின் பரப்பளவுக்கு சமம். பனி அடுக்குகள் என்பது நிலத்தில் இறுக்கமாக இணைக்கப்பட்ட பனிக்கட்டிகள். அவை உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும். கடல் மட்டம் உயராமல் இருக்க அவை உதவும். நன்னீரால் ஆன அண்டார்டிகாவின் பனி அடுக்குகள் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இந்த ஆண்டும் அப்படி நடந்த இந்த நிகழ்வு மிக முக்கியமானது. கிழக்கு அண்டார்டிகாவிலும் கடுமையான வெப்பநிலை நிலவியதை தொடர்ந்து, இம்மாதம் இந்த பிரமாண்டமான பனிக்கட்டி அடுக்கு சிதைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வளிமண்டல பாதிப்பு, வெப்ப அலையால் அண்டார்டிகாவின் பனி முகடுகள் தாக்கப்படக் கூடும் என்று நாசாவின் விஞ்ஞானி கேத்தரின் கொல்லோ வாக்கர், சமீபத்தில் டிவிட்டரில் பகிர்ந்தார். மேலும், கடலில் பனி அடுக்கு நொறுங்கி, சிறு வெள்ளை துண்டுகளாக இரைந்து கிடக்கும் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். பனி அடுக்குகள் நிரந்தரமாக மிதக்கும் பனித் தகடுகள் போன்றவை. அவை அழியும் போது பனிக் கட்டிகள் கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும். கிழக்கு அண்டார்டிகாவின் சில பகுதிகளில் மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிகமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதாக மினசோட்டா பல்கலையின் பனிப்பாறை நிபுணர் பீட்டர் நெப் கூறியுள்ளார். காலநிலை மாற்றம் புவியின் எப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் அண்டார்டிகா மட்டுமின்றி, ஒட்டு மொத்த பூமிக்கே ஆபத்து ஏற்படலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.