ஐஓசிஎல் நிறுவனம் ராட்சத குழாய்களை இறக்கி வைக்க எதிர்ப்பு!!

மயிலாடுதுறை அருகே ஐஓசிஎல் நிறுவனம் ராட்சத குழாய்களை தனியார் இடத்தில் இருப்பு வைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வை.பட்டவர்த்தி கிராமத்தில் நீடுரை சேர்ந்த அமீனுல்லா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் ஐஓசிஎல் நிறுவனம் கனரக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட ராட்சதக் குழாய்களை இறக்கி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல் ஐஓசிஎல் நிறுவனம் ஐந்துக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்களை கொண்டு வந்து இறக்கி வருகிறது.

எண்ணூர் தூத்துக்குடி இடையே எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ராட்சத குழாய்கள் இறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்காத கிராம மக்கள் நேற்று திடீரென குழாய்களை அப்புறப்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாசன், பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- மணல்மேடு இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் மயிலாடுதுறையில் ஆர்டிஓ தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையில் ராட்சத குழாய்கள் அப்புறப்படுத்துவது தொடர்பான சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் அனைத்து கிராம மக்களையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.