என்னுடைய ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி: பாக். பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில்பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு  எதிராக எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இது பற்றி விவாதிப்பதற்காக கடந்த மாதம் 28ம் தேதி கூட்டப்பட்ட நாடாளுமன்றம், விவாதம் நடத்தாமல் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இம்ரான் கான் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முக்கிய கட்சியான எம்க்யூஎம் கட்சியும், பலுசிஸ்தான் அவாமி கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டு, எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துள்ளன. இதனால், தீர்மானத்தை தோற்கடிக்க தேவையான 172 எம்பிக்களின் ஆதரவு இல்லாமல், இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்துள்ளார்.

அவருக்கு தற்போது 164 எம்பி.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் 175 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இம்ரான் கானின் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. இதற்கிடையே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டு சதி காரணமாகவே எதிர்க்கட்சிகள் தன் மீது இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்த இம்ரான் கான், இது தொடர்பான அமெரிக்காவின் கடிதத்தை தனது கட்சி எம்பி.க்களிடம் காட்டி நேற்று விளக்கம் அளித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 3ம் தேதி காலை விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.