வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது: உச்சநீதிமன்றம் உறுதி!!
புதுடில்லி :வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை உறுதி செய்தது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் பா.ம.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கடந்த மாதம் 27ல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழங்கிய தீர்ப்பு: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது. 1994ம் ஆண்டு சட்டத்தை மீறும் வகையில் இட ஒதுக்கீடு கூடாது. உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான நியாயமான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். ஜாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு கூடாது என தீர்ப்பு வழங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.