உக்ரைன் போரில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரஷ்யா தொழிலதிபர் மீது விஷத் தாக்குதல்..!

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் தலைநகரைக் குறி வைத்து ரஷ்யாப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். புடினின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை பிறப்பித்து வருகின்றன. இருந்த போதிலும் ரஷ்யா இந்த போரை நிறுத்துவதாக தெரியவில்லை. போர் இவ்வளவு தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறு புறம் போரை நிறுத்த பேச்சு வார்த்தைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முக்கியமாக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி இரு நாடு வெளி உறவு அமைச்சர்கள் துருக்கி நாட்டில் சந்தித்து பேசி இருந்தனர். அப்போதும் எந்த வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. அதனால் தற்போது ஐந்தாவது வாரமாக போர் தொடர்ந்து வருகின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில் தான், பேச்சு வார்த்தை குழுவில் இடம் பெற்று வரும் முக்கிய நபர்கள் மீது விஷத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தை குழுவில் உள்ள ரஷ்யத் தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த விஷத் தாக்குதல் நடந்துள்ளது. சமாதான பேச்சு வார்த்தையை சீர்குலைத்து போரை இன்னும் தீவிரப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் செய்தி வெளியிட்டு உள்ளது. ரஷ்யாவின் இந்த போரைக் கண்டித்து பல்வேறு மேற்கு உலக நாடுகளும் ரஷ்யா மீதும் ரஷ்யா தொழில் அதிபர்கள் மீதும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. அதில் மிக முக்கியமானவர்  ரஷ்யா தொழில் அதிபர் ரோமன் அப்ரமோவிச். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தையில் இந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் முக்கியமானவராக உள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் இல் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிச் மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த இரண்டு பேருக்குச் சிவந்த கண்கள், நீர் வடிதல், முகம் மற்றும் கைகளில் தோல் உரிதல் உள்ளிட்ட பாய்சன் அறிகுறிகள் தெரிந்துள்ளன. இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அமைதி பேச்சுவார்த்தையைச் சீர்குலைப்பதே இவர்களின் நோக்கம் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில் கூறப்பட்டுள்ளது.இந்த விஷ தாக்குதல் குறித்து ரோமன் அப்ரமோவிச் உள்ளிட்டோர் கருத்து கூற மறுத்து விட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ,நிலைமையைக் கட்டுப்படுத்தவும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் அனைத்து தொழிலதிபர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளனர் என்றும் ரஷ்யத் தொழிலதிபரும் அதிபர் புதின் உடன் நீண்ட உறவைக் கொண்டவருமான அப்ரமோவிச் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுப்பதாகத் தெரிவித்தார். அதேநேரம் விஷத் தாக்குதல் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.