விமானத்தில் பெண்கள் பயணிக்க தடை!!
காபூல் : ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் பயங்கரவாத அமைப்பு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
அப்போது ‘பெண்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும்’ என, தலிபான் அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கன் அரசு செயல் படத் துவங்கியுள்ளது. ஆப்கனில் கடந்த வாரம் உயர் நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். உள்நாட்டில் பெண்கள் தனியாக பயணம் செய்யவும் அனுமதியில்லை.இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களில் பெண்கள் தனியே செல்ல ஆப்கன் அரசு தடை விதித்துள்ளது. ‘ஆண் உறவினர் துணையுடன் வரும் பெண்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என, விமான நிறுவனங்களுக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என தலிபான்கள் மறுத்துள்ளனர். இருந்தும், ‘அரசு ஆணைப்படி விமானங்களில் தனியாக வரும் பெண்களை அனுமதிக்க வேண்டாம்’ என, சில விமான நிறுவனங்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. தலிபான் அரசு, சர்வதேச நிதியுதவிக்காக சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்காமல், வாய்மொழி உத்தரவு பிறப்பித்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.