மிட்செல் மார்ஷ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகல்..!!

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 
இதற்கிடையில் நேற்று முன்தினம் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ்க்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த அவருக்கு காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. இருப்பினும் மிட்செல் மார்ஷ் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது. 

தற்போதைய நிலைமையை பார்க்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மிட்செல் மார்ஷ் ஆடுவது கடினமானதாகும் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக கேமரூன் கிரீன் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

30 வயதான மிட்செல் மார்ஷ் ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரூ.6½ கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 6-ந் தேதி டெல்லி அணியினருடன் இணைய திட்டமிட்டு இருக்கும் மிட்செல் மார்ஷ் இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியுமா? என்பதிலும் கேள்விக்குறி எழுந்துள்ளது. அவரது காயத்தின் தன்மையை பொறுத்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் முக்கிய பங்கு வகித்த மிட்செல் மார்ஷ் கடந்த ஆண்டில் மட்டும் 20 ஓவர் போட்டியில் 627 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.