ரஷிய ராக்கெட் தாக்குதல்களால் அதிர்ந்த உக்ரைன் நகரம்: எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தது!!
உக்ரைன் மீதான ரஷிய போர் இரண்டாவது மாதமாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ராணுவ கட்டமைப்புகளைத் தாண்டி பொதுமக்களையும் குறிவைக்கும் வகையில் அடுக்கு மாடி குடியிருப்பு, ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள், குண்டுவீச்சு தவிர்ப்பு பதுங்குமிடங்கள் என ரஷிய படைகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன.
தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் கனவு கைகூடாத நிலையில், பிற நகரங்களை ரஷிய படைகள் தொடர்ந்து குறி வைக்கின்றன. உக்ரைன் மீதான போரின் முதல் கட்டம் முடிந்து விட்டதாகவும், கிழக்கு உக்ரைன் மீது கவனத்தை செலுத்தப்போவதாக அறிவித்தபோதும், ரஷியா அதை இன்னும் செயல்படுத்த வில்லை.
இந்தநிலையில் போலந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அங்குள்ள வார்சா நகரில் ரஷிய மக்களுக்கு அவர்களது தலைவர் புதின் பற்றி பேசினார். அப்போது அவர், “கடவுளின் பொருட்டு இந்த மனிதர் (புதின்) அதிகாரத்தில் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த நகரத்தில் இருந்து 250 மைல் தொலைவில் உள்ள லிவிவ் நகரை அடுத்தடுத்த ராக்கெட் தாக்குதல்களால் ரஷிய படைகள் அதிர வைத்தன. இங்கு பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இங்கும் ரஷிய படைகளின் பார்வை படிந்து இருக்கிறது.
அதுவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்து தலைநகர் வார்சா வந்தபோது, இந்த தாக்குதல்களை ரஷியா நடத்தி இருப்பது அதிர வைத்துள்ளது. இந்த தாக்குதல்களில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.
லிவிவ் நகரில் கப்பல் ஏவுகணைகளைக் கொண்டும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் எண்ணெய் கிடங்கும், சுத்திகரிப்பு ஆலையில் வானைத்தொடுகிற அளவுக்கு தீப்பற்றி எரிந்தன. இது தொடர்பான படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
7 லட்சம் பேர் வசிக்கிற இந்த நகரில் 2 வாரங்களுக்கு முன் ராணுவ பயிற்சி மையத்தின் மீது நடத்திய ஏவுகணை வீச்சில் 35 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
கார்கிவ் நகரை சுற்றி வளைத்துள்ள ரஷிய படையினர், கார்கிவ் பிராந்திய அணு ஆராய்ச்சி நிலையம் ( கார்கிவ் இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நியூட்ரான் மூல பரிசோதனை மையம்) மீது வான்தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு ஆளான கட்டிடம், புதிதாக கட்டப்பட்டதாகும்.
அணுக்கருப்பொருட்கள் தீவிரம் குறைந்தவை என்றும் கதிர்வீச்சு அபாயம் குறைவானவை என்றும் சர்வேதச அணு சக்தி முகமை தெரிவித்தது. ஆனாலும் இந்த தாக்குதலின் சேத விவரம் தெரிய வரவில்லை.
இதற்கிடையே உக்ரைனை இரு நாடுகளாக பிளவுபடுத்தும் நோக்கத்தை ரஷியா கொண்டிருப்பதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை கூறி உள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் பிடிக்கத்தவறிய ரஷியா, உக்ரைனை இரண்டாகப் பிளவுபடுத்தி, மாஸ்கோ கட்டுப்பாட்டுப்பகுதி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறது என்று உக்ரைன் ராணுவ புலனாய்வுத்துறையின் தலைவர் கிரிலோ புடானோவ் கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “உக்ரைனில் ரஷியா, வடகொரியா, தென்கொரியா போல உருவாக்க விரும்புகிறது” என கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.