மாரத்தான் போட்டியில் சுகாதார அமைச்சர்!!
சென்னை–தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், தன் 134வது மாரத்தானை, பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று நிறைவு செய்தார்.
கடந்த 2004ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கியதால், கால் எலும்பு ஆறு துண்டுகளாக உடைந்த நிலையில், சுப்பிரமணியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கால்களை மடக்கி அமரவோ, வேகமாக நடக்கவோ முடியாது என்ற நிலையில், சிகிச்சை பெற்று திரும்பினார்; நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், யோகா, மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி, நடை பயிற்சியிலும் ஈடுபட்டார்.
2013ல் மெதுவாக ஓடும் அளவுக்கு முன்னேறினார். அடுத்தாண்டு, புதுச்சேரியில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று, 21 கி.மீ., ஓடினார். அது தந்த தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தால், அடுத்த ஆண்டுக்குள், 25 மாரத்தான் போட்டிகளில் ஓடி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அப்போது துவங்கிய ஓட்டம், கொரோனா, மழை, தேர்தல் காலத்திலும் கூட நின்றதில்லை.
ஈடுபாட்டுடன் ஓடும் அவர், 10க்கும் மேற்பட்ட நாடுகள், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.நேற்று, பீஹார் மாநில தலைநகர், பாட்னாவில் நடந்த மாரத்தான் போட்டியில், 21.1 கி.மீ., துாரத்தை, இரண்டரை மணி நேரத்தில் ஓடி நிறைவு செய்தார். இது அவரின் 134வது மாரத்தான் போட்டி.அமைச்சர் சுப்பிரமணியன் விடாமுயற்சியுடன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதால், இளைஞர்கள் பலரும் ஊக்கம் பெற்று ஓட்டத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.