பி.கே.மூக்கையா தேவர் நூற்றாண்டு பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!!
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் எனக்கூறிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அரசியல் வாரிசும், உசிலம்பட்டி, பெரியகுளம் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 6 முறை எம்.எல்.ஏ.வாகவும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தற்காலிக சபாநாயகராக பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
மூக்கையா தேவர் மாணவ பருவத்தில் இருந்தே பொது காரியங்களில் ஈடுபட்டு நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடியவர்.
பார்வர்டு பிளாக் தலைவர்
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள் குற்றப் பிரிவினராக அறிவிக்கப்பட்ட நிலையில், சுதந்திரத்துக்கு பிறகு அதனை ஒழித்து, அந்த இனத்தினுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களின் உயர்வுக்கு வழி வகுத்த பெருமைக்குரியவர்.
1971-ம் ஆண்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக உயர்ந்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். கச்சத்தீவு இலங்கை நாட்டிற்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து வலுவான வாதங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
அரசு விழாவாக கொண்டாட வேண்டும்
இத்தயை பெருமைக்குரியவரின் நூற்றாண்டு பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதும், அவர் பிறந்த ஊரான பாப்பாபட்டியில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுவதும் அவருக்கு செய்யும் மரியாதையாகும்
முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு, தென் தமிழக மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.