பிற்காலபாண்டியர் கால கோயில் கண்டுபிடிப்பு!!!
அலங்காநல்லுார் : மதுரை அலங்காநல்லுார் சின்ன, பெரிய இலந்தைக்குளம் அருகே கோவிலுாரில் சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கள் கால கோயிலை மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் பிறையா, ராஜகோபால் கண்டுபிடித்தனர்.
அவர்கள் கூறியதாவது: கோயிலின் கர்ப்பகிரகம், அர்த்த, மகா மண்டபங்கள் சிதைந்துள்ளன. பிற்கால கட்டட, சிற்பக் கலைகளை பார்க்கும் போது பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களின் பங்களிப்பு தெரிகிறது. கருவறையில் எந்த சிலையும் இல்லை. வைணவ தலம் என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன.கோயில் நுழைவாயில்துாண்களில், நான்கு அடி உயர கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள்வைணவ தலம் தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
துாண்களில் வைணவ திருநாமம், சங்கு, சக்கரம், நரசிம்மர் சிற்பங்கள் உள்ளன. நடன மங்கையர், பெண் பேறுகால நிகழ்வை குறிக்கும் புடைப்பு சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.முன் மண்டப இடது ஓரம் செவ்வக கல்லில் உள்ள ஆட்டுக்கல் மருந்து தயாரிக்கப்பட்ட ஆதாரத்தை காட்டுகிறது. இங்கே விழுந்து கிடக்கும் ஒரு கல்லில் இரண்டு மீன்களின் உருவங்களுக்கு நடுவில் செண்டு பொறித்த சின்னம் காணப்படுகிறது
.மகாமண்டபம், கர்ப்பகிரகம் இடையே நுழைவாயிலில் ‘நாராயணபெருமாள்’, வலது ஓரம் ‘அழகர்’ பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்துப்படி மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காணச் செல்லும் இப்பகுதி மக்கள் இக்கோயிலில் அன்னதானம் வழங்கியதை அறியமுடிகிறது.
பராமரிப்பின்றி சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயில் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை மதுரை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் உறுதி செய்துள்ளார் என்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.