குஜராத்தில் பாரம்பரிய மருத்துவத்திற்காக சர்வதேச மையம்; பிரதமர் பாராட்டு!!!
புதுடில்லி: உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான மையத்தை குஜராத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஜாம் நகரில், உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்புடன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இதன் இடைக்கால அலுவலகம், குஜராத்தில், ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் செயல்பட உள்ளது.
இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவத்தின் திறனை, நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்துதல் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அரசின் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்படும், பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம் , நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவத்தின் திறனைப் பயன்படுத்தி மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.