பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அனுமதி?!!
டேராடூன் : உத்தரகண்டில், பொது சிவில் சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரகண்டில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, மாநில முதல்வராக நேற்று முன்தினம் புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார். அவர், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்ததால், அடுத்த ஆறு மாதங்களில், ஏதேனும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.இந்நிலையில், முதல்வர் தாமி தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொது சிவில் சட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தில், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்காக, சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை, தாமி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.