பேருக்கு ஒரு காலேஜ்…:அரசு மகளிர் கல்லூரியில் : யார் தருவது ‘நாலெட்ஜ்?’!!

கோவை: பெண்கள் கலைக் கல்லுாரி துவங்கி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போதிய ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவியர் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை புலியகுளம் -லட்சுமி மில்ஸ் ரோட்டில், 2020 – 21ம் கல்வியாண்டில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளுடன் கல்லுாரி துவங்கப்பட்டது. 14 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.கல்லுாரி மிகவும் காலதாமதமாக துவங்கப்பட்டதால், மாணவியர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்தது. முதல் ஆண்டில், 170 மாணவியர் மட்டுமே சேர்ந்தனர். கல்லுாரி துவங்கி இரண்டு கல்வி ஆண்டுகள் ஆன நிலையில், நடப்பாண்டு, 440 மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 14 ஆசிரியர் பணியிடங்களில், நான்கு இடங்கள் காலியாக உள்ளன.

குறிப்பாக ஆங்கிலத் துறையில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியர் கல்வி கற்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஆங்கில பாடப்பிரிவில், மொழியியல், நாடகம் குறித்த பாடங்கள் மிகவும் கடினமானவை. அவற்றை பயிற்றுவிக்க திறமைமிக்க, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் மட்டுமே முடியும். ஆனால் உரிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.

Leave a Reply

Your email address will not be published.