ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி!!!
நியூயார்க்,:போர் நடந்து வரும் உக்ரைனில், மனிதநேய தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, ரஷ்யா தாக்கல் செய்த தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி அடைந்தது. மொத்தம், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பில், இந்தியா உட்பட, 13 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் துவங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அங்கு மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவில்லை. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 25 சதவீதம் பேர், அதாவது ஒரு கோடி பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதநேய தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யா தாக்கல் செய்தது. ஆனால், இத்தீர்மானத்தில், ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் குறித்து, எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை.இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே ஓட்டளித்தன. அதே நேரத்தில், இந்தியா உட்பட, 13 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஒன்பது நாடுகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி அடைந்தது.இதற்கிடையே, ஐ.நா., பொது சபையில், இரண்டு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவின் அத்துமீறல் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள மனிதநேய தேவைகள் குறித்தும், மக்கள் வெளியேற பாதுகாப்பான வழிமுறைகள் ஏற்படுத்த வலியுறுத்தியும், உக்ரைன் சார்பில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், உடனடியாக போரை நிறுத்தவும், இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. உக்ரைனின் இந்த தீர்மானத்தை, பல்வேறு நாடுகள் வழிமொழிந்துள்ளன; பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.பொதுச் செயலருடன் சந்திப்புஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட கூட்டங்களில் பங்கேற்க, நம் வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா நியூயார்க் சென்றுள்ளார்.
அவர், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைன் விவகாரம், ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.