லாகூர் டெஸ்ட்: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்!!!!
24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 7 ரன்களில் வெளியேறினார். அதே நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய லபுசேன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 391 ரன்கள் குவித்தது . பின்னர் தனது முதல் இன்னிங்க்சை ஆட தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்துள்ளது.
இந்த போட்டியில் 59 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் முதல் 150 இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் 7,993 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் முதல் 150 இன்னிங்சிற்கு பிறகு 7,913 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (7,869) ஆகியோர் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் வீரேந்திர சேவாக் (7,694), ராகுல் டிராவிட் (7,680 ) ஆகியோர் அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.