ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை!!

சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான கடந்த ஆண்டு (2021) ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் இந்த மருத்துவமனை கட்டிட வடிவமைப்பு தயார் செய்யப்பட்டது. முதலில் 500 படுக்கை வசதிகள் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது 1,000 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைய உள்ளது.

இந்த நிலையில் இந்த உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

மருத்துவமனையின் ஒவ்வொரு தளங்களிலும் என்னென்ன மருத்துவ வசதிகள் இடம் பெற உள்ளன? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

பல்வேறு அறுவை சிகிச்சை துறைகள்

இந்த உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயவியல் துறை, மூளை நரம்பியல் துறை, கதிர்வீச்சு, குறுக்கீட்டு கதிர்வீச்சு துறை, குடல் மற்றும் இரைப்பை மருத்துவத்துறை, நோய் எதிர்ப்பு குருதியியல் துறை, புற்றுநோய் மருத்துவத்துறை, சிறுநீரக மருத்துவத்துறை ஆகிய மருத்துவ உயர் சிறப்பு பிரிவுகளும், இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை ஆகிய பிரிவுகள் அமைய உள்ளது. சூரிய ஒளி மின்சாரம், மழைநீர் கட்டமைப்பு, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் இடம் பெற இருக்கின்றன. இதுதொடர்பாக மருத்துவமனை கட்டிடத்தின் மாதிரி வடிவமைப்புடன் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒளிபரப்பபட்டது.

விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் கே.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அதிகாரி ப.செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் ஆர்.நாராயணபாபு, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் உள்பட கலந்துகொண்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.