ஆறுமுகசாமி ஆணையத்தில் 2-வது நாளாக ஆஜர்: ஓ.பன்னீர்செல்வத்திடம் 5 மணி நேரம் விசாரணை!!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி அவர் நேற்று முன்தினம் ஆணையத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று மீண்டும் அவர் ஆஜராக ஆணையம் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, நேற்று 2-வது நாளாக மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் ஆஜரானார். நேற்று காலை ஆஜரான அவரிடம் ஆணையம் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவரிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கைரேகை வைத்தது தெரியும்

கேள்வி:- ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியுமா?

பதில்:- அந்த 3 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான். தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும்.

ஜெயலலிதாவுக்கு வழங்கிய உணவு

கேள்வி:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் நன்றாக இருப்பதாக எப்போதாவது சசிகலா உங்களிடம் தெரிவித்தாரா?

பதில்:- ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இதனை நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். இதுகுறித்து பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை.

கேள்வி:- அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையாவது உங்களிடம் தெரிவித்தாரா?

பதில்:- இல்லை. அதுபோன்று தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

கேள்வி:- ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டன?

பதில்:- அதுபற்றி எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

எனக்கு எந்த சந்தேகமும் இல்லை

இதன்பின்பு சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை செய்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சசிகலா மீதான குற்றச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காகத்தான் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா.?

பதில்:- சரியானதுதான்.

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா?

பதில்:- ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால்தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும்.

ஜெயலலிதாவை பார்த்தேன்

கேள்வி:- 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி எக்மோ கருவி அகற்றப்படும் முன்பு நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) உள்பட 3 மூத்த அமைச்சர்கள் சென்று ஜெயலலிதாவை பார்த்தது உண்மையா?

பதில்:- ஆம். பார்த்தது உண்மை தான்.

கேள்வி:- 2014-ம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது கடும் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டது என்பது சரியா?

பதில்;- ஆம். சரிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்று சசிகலா தரப்பில் கேட்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

டாக்டர்கள் மீது நம்பிக்கை

இதைத்தொடர்ந்து அப்பல்லோ தரப்பில் ஆஜரான வக்கீல் மைமூனா பாட்சா, ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை செய்தார்.

கேள்வி:- ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு உள்ளது? என யாரேனும் சிகிச்சை தொடர்பான ஆவணங்களுடன் புகார் தெரிவித்தனரா?

பதில்:- இல்லை.

கேள்வி:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு திருப்தி மற்றும் நம்பிக்கை இருந்ததா?

பதில்:- எந்த நோய்க்கு எந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்பது தெரியாது. அப்பல்லோ டாக்டர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவர்களது சிகிச்சையிலும் திருப்தி இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்று அப்பல்லோ தரப்பில் கேட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

5 மணி நேரம் விசாரணை

ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று 10.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் என மொத்தம் 5 மணி நேரம் பரபரப்பான விசாரணை நடைபெற்றது.

கடைசியாக ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டுமே ஆணையம் விசாரணை நடத்தப்பட வேண்டியது இருந்த நிலையில் அந்த விசாரணையும் நிறைவு பெற்று விட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. சுமார் 4½ ஆண்டுகளுக்கு பின்பு இந்த விசாரணை முடிவுக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கையை தயார் செய்வதற்கான பணியை ஆணையம் விரைவில் தொடங்க உள்ளது.
‘சசிகலா மீது மரியாதையும், அபிமானமும் உள்ளது’

ஆணையம் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது சசிகலா தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டத்தில் ஈடுபடவில்லை, அதுதொடர்பாக எந்தவித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுபற்றி தங்களது கருத்து என்ன?

பதில்:- அந்த கருத்து சரியானதுதான்.

கேள்வி:- சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும், அபிமானமும் உள்ளதா?

பதில்: சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும், அபிமானமும் இன்று வரை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையத்தின் கேள்விக்கு அப்பல்லோ எதிர்ப்பு

ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த இருதய பிரச்சினை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையத்தின் வக்கீல் கேள்வி எழுப்பினார். அதற்கு அப்பல்லோ தரப்பு வக்கீல், ‘சிகிச்சை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே வாக்குமூலம் அளித்த நிலையில், அது தொடர்பான கேள்விகளை எப்படி எழுப்ப முடியும்’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தோ தான் கேள்வி எழுப்பக்கூடாது. வியாதி இருந்தது உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பலாம் என ஆறுமுகசாமி ஆணைய வக்கீல் விளக்கம் அளித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.