வங்கதேச தலைநகரில் கோயில் மீது தாக்குதல்; சிலைகள் சேதம்: நகைகள் கொள்ளை!!!
தாகா: பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் சமீப காலமாக இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. வங்கதேசத்தில் நேற்று முன்தினம் இரவும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நாட்டு தலைநகர் தாகாவில் உள்ள வாரி தனா பகுதியில் இஸ்கான் அமைப்பால் நடத்தப்படும் ராதாகந்தா கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர், ஹாஜி சைபுல்லா என்பவரின் தலைமையில் வந்து கோயில் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கோயிலில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதை தடுத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த கோயிலை நிர்வகிக்கும் இந்து அமெரிக்கன் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோயிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய கும்பல், சிலைகளை சேதப்படுத்தியது. கோயிலில் இருந்த விலை மதிப்புமிக்க நகைகள், பொருட்கள், பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றது. தாக்குதல் நடந்தபோது போலீசாருக்கு தகவல் கொடுத்த போதும், அவர்கள் வந்து தாக்குதலை தடுக்கவில்லை,’ என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. மேலும், தாக்குதல் நடத்தப்படும் வீடியோ காட்சிகளையும் அது வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.