தியேட்டர் மீது ரஷ்யா குண்டுவீச்சு!!!
கீவ்: உக்ரைனில் சினிமா தியேட்டரின் மீது ரஷ்யா குண்டு வீசியதில் கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. உக்ரைனின் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற, ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நேற்றுடன் 22வது நாளை எட்டி உள்ளது. இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும் போரும் நடந்து வருகிறது. இதில் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள், பள்ளி கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா படைகள், நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்திருந்த 3 அடுக்குகள் கொண்ட தியேட்டர் மீதும் நேற்று முன்தினம் குண்டுவீசி தாக்கியது.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி வருகிறது. மரியுபோல் நகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். நேற்று முன்தினம் அந்த தியேட்டர் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 3 அடுக்கு மாடி தியேட்டர் இடிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளதாகவும் உக்ரைன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மரியுபோல் உள்ளூர் கவுன்சில் வெளியிட்ட தகவலில், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் மக்கள் தஞ்சம் அடைந்த தியேட்டரை அழித்து இருக்கிறார்கள். இதை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்’ என்று தெரிவித்து உள்ளது. உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ‘‘குண்டுவீச்சில் சேதமடைந்த தியேட்டரின் நுழைவாயில் பகுதியில் இடிபாடுகள் கிடக்கின்றன. இதனால், அங்கு அடைக்கலம் புகுந்த ஆயிரக்கணக்கானவர்கள் கதி என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை’’ என்றனர். ஆனால், மரியுபோல் தியேட்டர் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.
* 2,400 பேர் பலி
மரியுபோல் நகரில் இருந்து 1,30,000 பேர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், தற்போது 3 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். அங்கு 20 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் தாக்குதலில் 2,400 பேர் பலியாகி உள்ளனர்.
* நெஞ்சம் நொறுங்குகிறது
தியேட்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கூறிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘எங்கள் மக்களின் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை கேட்டதும் நெஞ்சம் நொறுங்குகிறது. ரஷ்யாவின அராஜகத்தை ஒடுக்க, அந்த நாட்டின் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.
* மேயர் விடுதலையில் மர்மம்
உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோவை ரஷ்ய வீரர்கள் சமீபத்தில் கடத்தி சென்றனர். சில நாட்களுக்கு முன் அவர் மீட்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்தது. இந்நிலையில், மேயரை மீட்பதற்காக தங்களின் பிடியில் இருந்த 9 ரஷ்ய ராணுவ வீரர்களை, உக்ரைன் விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.முன்னேற முடியவில்லை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நிலம், கடல் மற்றும் வான் பகுதிகளில் ரஷ்யா நடத்தும் தாக்குதலால் அந்த ராணுவத்துக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதில், ரஷ்ய படைகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் அனைத்தும் உக்ரைன் வசம்தான் உள்ளன,’ என்று குறிப்பிட்டுள்ளது.
* ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்திய நீதிபதி
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்கு முன் உக்ரைன் வழக்கு தொடர்ந்து. இதை விசாரித்த 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதில், ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று 13 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இவர்களில் இந்தியாவை சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரியும் ஒருவர். ரஷ்யாவுடன் உள்ள நெருங்கிய நட்பு காரணமாக, உக்ரைன் போர் தொடர்பாக ஐநா.வில் இதுவரை கொண்டு வந்த எந்த வாக்கெடுப்பிலும் இந்தியா ஒருமுறை கூட பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கு ஆதரவாக இதை செய்கிறது. இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி தீர்ப்பு அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
* மன்னிக்க முடியாத வார்த்தை: ரஷ்யா
அதிபர் புடினை போர் குற்றவாளி என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்ததற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், ‘உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை குண்டுகளை வீசி கொன்ற ஒரு நாட்டின் தலைவரின் இது போன்ற பேச்சை ஏற்று கொள்ளவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது,’ என்றார்.
* போர் குற்றவாளி என தீர்மானிப்பது எப்படி?
உக்ரைனில் மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு வார்டுகளில் தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் புடினை, போர் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டினார். ஆனால், ஒருவரை போர் குற்றவாளி என கூறுவது எளிதானது அல்ல. அதனை தீர்மானிக்கவும், அவர்கள் எப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கும் சர்வதேச அளவில் தனி வரையறைகள் உள்ளன. புடினை போர் குற்றவாளி என கூறுவதை அமெரிக்கா முதலில் தவிர்த்து வந்தது. அதற்கு விசாரணை மற்றும் சர்வதேச உறுதிப்பாடு தேவை என்றும் கூறிவந்தது. ஆனால், உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெறித்தனம் நாளுக்கு நாள் அதிகமானதாலும், மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாலும், புடின் மீது தனது நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இதில், புடினை போர் குற்றவாளியாக அறிவித்து, அவர் மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி இருக்கிறது.
மேலும், ‘புடின் ஒரு போர் குற்றவாளி’ என்று பைடனும் நேரடியாக நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். இது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இது பற்றி வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ‘போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களின் காட்சிகளை பார்த்து, பைடன் தனது இதயத்திலிருந்து பேசுகிறார்,’’ என்றார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் புடின் போர் குற்றவாளியா? என்பதை அறிய, அமெரிக்கா உள்ளிட்ட 45 உலக நாடுகள் ஒன்றாக இணைந்து விசாரணையில் இறங்கி இருக்கின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச போர் விதிகளை புடின் மீறினாரா? மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்து அந்நாடுகள் விசாரித்து வருகின்றன. அதேபோல், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ரஷ்யாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எது போர் குற்றம்
* வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து கொலை செய்வது
* எதிரி நாட்டு படையை விட பன்மடங்கு படைபலத்துடன் சண்டையிடுவது
* தாக்குதல்களில் இருந்து தப்பிக்க மனிதர்களை கேடயங்களாக பயன்படுத்துவது
* பணயக் கைதிகளை பிடித்து வைப்பது
* ராணுவ உதவியுடன் அப்பாவி மக்களை கொலை செய்வது
* பேரழிவை ஏற்படுத்தி நிலங்களை கையகப்படுத்துவது – இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, புடின் போர் குற்றவாளி என அறிவிக்கப்படுவார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.